உள்ளூர் செய்திகள்

பஸ் நிலையத்தில் ஒரு டிரைவரிடம் போலீசார் கருவி மூலம் குடிபோதையில் உள்ளார்களா? என்று சோதனை செய்தனர்.

கடலூரில் குடித்து விட்டு பஸ் ஓட்ட முயன்ற டிரைவர் மீது வழக்கு- பஸ் பறிமுதல்

Published On 2023-07-06 03:55 GMT   |   Update On 2023-07-06 03:55 GMT
  • கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பஸ் விபத்து அதிகரித்து வருகிறது.
  • போதையில் பஸ்சை ஓட்ட முயன்ற டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி பெரும் கோர விபத்தில் 7 பேர் பலியாகியும், 88 பேர் காயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பஸ் பூண்டியாங்குப்பம் அருகே சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியும் விபத்து ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆங்காங்கே தொடர் விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களிடம், பொதுமக்கள் நலன் கருதி மிக பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்ட வேண்டும் என அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.

குடி போதையில் வாகனம் ஓட்டுகிறார்களா? என்பதனை இரு சக்கரம், கார் மற்றும் கனரக வாகன டிரைவர்களை போலீசார் சோதனை செய்வது வழக்கம். ஆனால் பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களை சோதனை செய்வது இல்லை.

ஆனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பஸ் விபத்து அதிகரித்து வரும் நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் இன்று காலை கடலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடியாக பஸ்களை ஓட்டி வந்த டிரைவர்களை நிறுத்தி குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறார்களா? என அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பயணிகளை ஏற்றி வந்த அனைத்து தனியார் மற்றும் அரசு பஸ்களை சாலையோரத்தில் நிறுத்தி பஸ் டிரைவர்கள் குடிபோதையில் ஓட்டுகிறார்களா? என்பதனை மெஷின் மூலம் சோதனை செய்தனர்.

கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பஸ்களை நிறுத்தி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், செந்தில்குமார் மற்றும் போலீசார் டிரைவர்களிடம் அதிரடி சோதனை நடத்தினர்.

சுமார் 50-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கடலூரில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் இரவில் மது அருந்தி விட்டு காலையில் பஸ்சை ஓட்டியது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அந்த பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

போதையில் பஸ்சை ஓட்ட முயன்ற டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.

மேலும் டிரைவர்கள் யாரும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. உடல் உபாதைகள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் பஸ்களை ஓட்டுவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். அதிவேகமாக வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பஸ் டிரைவர்களை போலீசார் அதிரடியாக குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறார்களா? என சோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏனென்றால் அனைத்து வாகன டிரைவர்களையும் சோதனை செய்யும் நிலையில் பஸ் டிரைவர்களை இதுபோன்ற சோதனை செய்தால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதனால் பெரும்பாலும் இது போன்ற சோதனைகள் தவிர்த்து வந்த நிலையில் தொடர் விபத்து காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இன்றுடன் இந்த சோதனையை நிறுத்தாமல் தொடர் நடவடிக்கையாக இதனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News