உள்ளூர் செய்திகள்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தற்கொலை முயற்சி

Published On 2023-11-27 08:45 GMT   |   Update On 2023-11-27 08:46 GMT
  • போலீசாரும் அங்கு விரைந்து வந்து வள்ளியம்மை மீது தண்ணீரை ஊற்றினர்.
  • தொகையை கேட்டு எனது நிலத்தில் நான் பயிர் வைப்பதற்கு அந்த நபர் இடையூறு செய்து வருகிறார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியை அடுத்த வைராவிகுளத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி வள்ளியம்மை (வயது 70).

இவரது மகள் முருகம்மாள். இவர் மணிமுத்தாறில் உள்ள அரசு மீன் பண்ணையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறு கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிப்பதற்காக வள்ளியம்மை வந்திருந்தார். அப்போது கூட்ட அரங்கில் வைத்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து தலையில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து பாட்டிலை தட்டி விட்டனர். மேலும் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும் அங்கு விரைந்து வந்து வள்ளியம்மை மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது வள்ளியம்மை கூறுகையில், கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் பணம் வாங்கி இருந்தேன். தற்போது அந்த தொகையை கேட்டு எனது நிலத்தில் நான் பயிர் வைப்பதற்கு அந்த நபர் இடையூறு செய்து வருகிறார்.

எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தேன். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்து இங்கு வந்தேன் என்று கூறினார்.

Tags:    

Similar News