உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம கும்பல்: வீட்டில் வைத்திருந்த 4 பவுன் செயின் திருட்டு- பொதுமக்கள் பீதி

Published On 2023-08-05 07:48 GMT   |   Update On 2023-08-05 07:48 GMT
  • தொடர் கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி:

தருமபுரி கீழ்கொட்டாய்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது25).

இவர் நேற்று வீட்டில் குளிக்க சென்றபோது தனது 4 பவுன் செயினை ஜன்னல் ஓரம் கழற்றி வைத்திருந்தார். குளித்து விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது ஜன்னல் ஓரம் வைத்த 4 பவுன் செயினை காணவில்லை. இதுகுறித்து விஜயலட்சுமி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி ஏ.கொல்லஅள்ளி பகுதியில் ஒரு வீட்டில் நேற்று இரவு மர்ம நபர் புகுந்து திருட முயன்றுள்ளார். அப்போது சத்தம்கேட்டு வீட்டின் உரிமையாளர் எழுந்து வந்து பார்த்தபோது அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதேபோன்று பிடமனேரி பகுதியில் ஒரு பெண் நடந்து சென்றபோது மர்மநபர் ஒருவர் பின்னால் வந்து அவர் கழுத்தில் அணிந்து இருந்த செயினை பறிக்க முயன்றார். அப்போது அந்த பெண் திருடன், திருடன் என்று கூச்சலிட்டதால், அந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பித்து சென்றார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர் கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் கொள்ளை முயற்சி காரணமாக அப்பகுதிகளில் பொதுமக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.

எனவே, தருமபுரி போலீசார் இரவு மற்றும் பகல் நேரங்களிலும் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News