உள்ளூர் செய்திகள்

பவானி கூடுதுறை பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள், பழைய துணிகள்

Published On 2024-01-22 07:17 GMT   |   Update On 2024-01-22 07:17 GMT
  • சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைய பெற்று உள்ள கோவில் ஆகும்.
  • கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

பவானி:

பவானி நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் ஆகிய சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைய பெற்று உள்ள கோவில் ஆகும்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவேரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

இந்த கோவிலுக்கு தினசரி உள்ளூர் வெளியூர் வெளிமாநில பக்தர்கள் என பல வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், திருமண தடை தோஷம் நீக்குதல், செவ்வாய் தோஷம் நீக்குதல், ராகு கேது பரிகார தோஷம் நீக்குதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து சாமி வழிபாடு மேற்கொண்டு சென்று வருகின்றனர்.

அதேபோல் பரிகார பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தாங்கள் அணிந்து கொண்ட பழைய துணிகளை காவிரி ஆற்றில் கழற்றி விட்டு செல்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த துணிகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு ஏலதாரர்கள் அதை சுத்தம் செய்வது வழக்கமாக உள்ளது.


தற்போது காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் தினசரி 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் காவிரி ஆறு பார்க்கும் இடமெல்லாம் பாறைகளாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் விடும் துணிகள் ஆங்காங்கே காவிரி ஆற்றின் பாறைகள் உட்பட படித்துறைகள் என பல்வேறு இடங்களில் கிடப்பதை நாம் பார்க்க முடிகிறது.

துணிகளை அப்புறபடுத்த ஏலம் எடுத்தவர்கள் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அந்த துணிகளை மட்டும் எடுத்துக் கொள்வதாகவும், மீதமுள்ள துணிகளை ஆங்காங்கே விட்டு விடுவதாகவும் பக்தர்கள் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இதனால் பார்க்கும் இடமெல்லாம் பழைய துணிகளாகவும், குவிந்து கிடக்கும் குப்பைகளும், பார்க்கவே முகம் சுளிக்கும் வகையில் கூடுதுறை கோவில் பின்பகுதி அமைந்துள்ளது என பக்தர்கள் பலரும் வேதனையுடன் தெரிவித்து கொண்டனர்.

இதனால் சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் பக்தர்கள் அந்த துணிகளை ஆற்றில் விடுவதை தடுத்தோ அல்லது துணிகள் தண்ணீர் ஓடும் இடங்களில் போட வலியுறுத்தி பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி காவிரி ஆற்றையும், சங்கமேஸ்வரர் கோவில் படித்துறை பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News