கடலில் விழுந்த பெண்களை காப்பாற்ற குதித்த என்ஜினீயரும் பலி- படகில் அழைத்துச்சென்ற 2 பேர் கைது
- பயணித்த படகு நடுக்கடலுக்கு சென்று திருப்பியபோது பலமாக காற்று வீசியதால் நிலைதடுமாறியது.
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம்:
மதுரை சுண்ணாம்புக்கார தெருவை சோ்ந்தவா் முருகன் (வயது62). இவா் தனது மனைவி, 3 மகன்கள், உறவினா்களுடன் கடந்த 18-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ள உலக நாயகி அம்மன் கோவிலுக்கு குலதெய்வ வழிபாடு செய்ய சென்றனர்.
அவா்கள் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றுமாலை தேவிபட்டினம் கடற்கரையில் இருந்து சுந்தர் என்பவரின் நாட்டுப்படகில் கடலுக்குள் சுற்றுலா சென்றனா். அந்த படகில் முருகன், அவரது மனைவி பஞ்சவா்ணம் (வயது56), மகன்கள் கனகராஜ் (35), முத்துமணி (33), ரவி (30), முத்து மணியின் மாமியாா் மணி மேகலை (50), அவரது மூத்த சகோதரி இருளாயி (54), குழந்தைகள் உள்ளிட்ட 13 போ் சென்றனர்.
அவர்கள் பயணித்த படகு நடுக்கடலுக்கு சென்று திருப்பியபோது பலமாக காற்று வீசியதால் நிலைதடுமாறியது. அப்போது படகின் ஓரத்தில் அமா்ந்திருந்த மணிமேகலை, இருளாயி ஆகியோா் தவறி கடலுக்குள் விழுந்து தத்தளித்தனா்.
அவர்கள் தத்தளிப்பதை கண்டு, படகில் சென்ற முத்துமணி என்பவர் கடலுக்குள் குதித்து காப்பாற்ற முயன்றார். இதில் 2 பெண்களையும் மீட்டு படகில் ஏற்றிய அவரை கடல் அலை இழுத்துச்சென்றது.
இதையடுத்து கரைக்கு வந்து பாா்த்தபோது மீட்கப்பட்ட மணிமேகலை, இருளாயி ஆகிய இருவரும் இறந்து விட்டது தெரியவந்தது. இதை தொடா்ந்து அவா்களது உடல்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் கடலில் மூழ்கிய முத்துமணியை கடலோர காவல்படை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முழுவதும் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து இன்று காலை 8 படகுகளில் மீனவர்கள் மற்றும் மரைன் போலீசார் முத்துமணியை தேடினர். அப்போது அவரது உடல் நடுக்கடலில் மிதப்பது தெரியவந்தது. அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஏற்கனவே 2 பெண்கள் இறந்தநிலையில், அவர்களை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் குறித்த என்ஜினீயர் முத்துமணியும் இன்று பிணமாக மீட்கப்பட்டதால், படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
இந்த சம்பசவம் தொடர்பாக சட்ட விரோதமாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். சுற்றுலா பயணிகளை படகில் அழைத்துச்சென்ற சுந்தர்(30), ராஜா(45) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.