உள்ளூர் செய்திகள்

கம்பம் அருகே மனைவியை கொன்று பிணத்தை மறைத்து தலைமறைவான கணவர் கைது

Update: 2023-03-28 05:39 GMT
  • போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார்.
  • போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கம்பம்:

தமிழக கேரள எல்லையான கம்பம் மெட்டு கட்டப்பனை பகுதியை சேர்ந்தவர் பிஜேஷ் (வயது29). இவரது மனைவி அனுமோள் (27). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். கடந்த 18ந் தேதி தனது மனைவியை காணவில்லை என பிஜேஷ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் பிஜேஷ் திடீரென தலைமறைவானார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் அனுமோளின் பெற்றோர் தனது மகளை தேடி வந்தபோது அவர் கொலை செய்யப்பட்டு வீட்டு கட்டிலுக்கு கீழே போர்வையில் சுற்றப்பட்டு கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்து அவரது கணவரை தீவிரமாக தேடி வந்தனர். குமுளி அருகே அவர் மறைந்திருப்பது தெரியவரவே போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். இது குறித்து பிஜேஷ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-

எனக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவேன். இதனை தனது மனைவி கண்டித்தார். மேலும் மது குடித்தால் வீட்டுக்குள் வரக்கூடாது என எச்சரித்தார். இருந்தபோதும் எனது மது பழக்கத்தை விடமுடியவில்லை. இதனால் போலீசில் என் மீது புகார் அளித்தார். போலீசார் என்னை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் என் மனைவியை தாக்கினேன். இதில் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். அவரது உடலை மறைத்து வைத்து விட்டு அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் எடுத்து விற்று செலவு செய்தேன். பணம் தீர்ந்ததால் எனது நண்பர்களிடம் பணம் வாங்குவதற்காக குமுளிக்கு வந்தபோது போலீசார் என்னை கண்டுபிடித்து விட்டனர் என்றார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News