உள்ளூர் செய்திகள்

கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி

Published On 2023-12-07 07:33 GMT   |   Update On 2023-12-07 07:35 GMT
  • மாரியப்பன் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
  • மாரியப்பன், சித்ரா தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இரணியல்:

மதுரை பில்லாபுரம் துளசிராம் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55), தச்சுதொழிலாளி. இவரது மனைவி சித்ரா (50). இவரது மகன் மாதேஸ்வரன் (23). இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் பாக்கியராஜ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்பொழுது மாரியப்பன்-சித்ரா தம்பதியினர் குமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

மாரியப்பன் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் மாரியப்பனிடம் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுக்க தொடங்கினார்கள். ஆனால் மாரியப்பனால் பணத்தை திரும்பிக்கொடுக்க முடியவில்லை. இதனால் மாரியப்பன் மனமடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை மாரியப்பன் வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் வந்துள்ளார். அப்போது அவர் மாரியப்பனின் வீட்டின் கதவை தட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் கதவு திறக்கப்படவில்லை. அப்போது வீட்டின் கதவு வழியாக பார்த்தபோது மாரியப்பன் மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மாரியப்பன் மற்றும் அவரது மனைவி சித்ரா தற்கொலை செய்து கொண்டது குறித்து சென்னையில் உள்ள அவரது மகனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

சென்னையில் இருந்து மாதேஸ்வரன் ஊருக்கு வந்து கொண்டிருக்கிறார். மாரியப்பன், சித்ரா தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இரணியல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News