உள்ளூர் செய்திகள்

இறந்ததாக கருதி வேறு ஒருவரின் உடலை அடக்கம் செய்த உறவினர்கள்

Published On 2022-09-22 18:55 IST   |   Update On 2022-09-22 18:55:00 IST
  • கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சித்ரா.
  • கடந்த 20-ந் தேதி அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்து சென்றார். பின்னர் சித்ரா வீடு திரும்பவில்லை.

தாம்பரம்:

கூடுவாஞ்சேரி, அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சித்ரா (வயது 73).

இவர் கடந்த 20-ந் தேதி அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்து சென்றார். பின்னர் சித்ரா வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி - ஊரப்பாக்கம் இடையே மூதாட்டி ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே மூதாட்டி சித்ரா மாயமாகி இருந்ததால் அவரது உறவினர்களை அழைத்து போலீசார் உடலை காட்டி விசாரித்தனர். அப்போது இறந்து கிடந்த மூதாட்டி சித்ரா என்பதை உறவினர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து தாம்பரம் ரெயில்வே போலீசார் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்து சித்ராவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் சித்ரா இறந்தாக கருதி இறுதி சடங்குகளை செய்து நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள சுடு காட்டில் உடலை அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் இறந்ததாக கருதப்பட்ட மூதாட்டி சித்ரா நேற்று காலை திடீரென வீட்டிற்கு உயிருடன் வந்தார். இதனை கண்டு வீட்டில் இருந்த குடும்பத்தினர் மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் அடைந்தனர். இறந்தவர் எப்படி உயிரோடு வந்தார் என்று குழப்பம் அடைந்தனர்.

அவர்கள் சித்ராவிடம் விசாரித்த போது அவர் வழி தெரியாமல் வேறு இடத்தில் சுற்றி விட்டு திரும்பி வந்திருப்பது தெரிந்தது. சித்ரா இறந்ததாக கருதி வேறு ஒரு மூதாட்டியின் உடலை உறுதி செய்து அடக்கம் செய்து இருப்பதும் தெரிய வந்தது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த சித்ராவின் உறவினர்கள் நடந்த குழப்பம் குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சித்ரா என்று சுடுகாட்டில் புதைக்கப்பட்ட மூதாட்டி யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று ரெயில்வே போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர். புதைக்கப்பட்ட மூதாட்டியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து தருமாறு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியரிடம் தாம்பரம் ரெயில்வே போலீசார் மனு கொடுத்து இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து புதைக்கப்பட்ட மூதாட்டி உடல் தோண்டி எடுக்கப்பட உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்ததாக கருதப்பட்ட மூதாட்டி சித்ரா திரும்பி வந்ததால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Similar News