வண்டலூர் அருகே மாநகர பஸ்சில் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து பலி
- பஸ்சின் பின் பக்க சக்கரத்தில் சஞ்சய் சிக்கினார். உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் விரைந்து வந்து சஞ்சய்யின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வண்டலூர்:
சென்னையில் மாநகர பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்து வருவது தொடர் கதையாக உள்ளது.
போலீசார் மாணவர்கள் மீது நடவடிக்கை மற்றும் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இது நீடிக்கிறது.
இந்த நிலையில் மாநகர பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் ஒருவர் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊரப்பாக்கம், மகாவீர் நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் சஞ்சய் (வயது 18). கேளம்பாக்கத்தை அடுத்த படூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரிக்கு மாநகர பஸ்சில் செல்வது வழக்கம்.
தீபாவளி விடுமுறை முடிந்து இன்று காலை சஞ்சய் வழக்கம் போல தாம்பரத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்ற மாநகர பஸ்சில் (எண்.515) ஏறினார்.
பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார்.
வண்டலூர் பூங்கா 2-வது வாகன நிறுத்தம் இடம் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி சஞ்சய் தவறி கீழே விழுந்தார்.
இதில் பஸ்சின் பின் பக்க சக்கரத்தில் சஞ்சய் சிக்கினார். உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்டு பஸ்சில் இருந்த மற்ற மாணவர்கள், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து சஞ்சய்யின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கல்லூரி மாணவர் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் மாநகர பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டாம் என்று போலீசார் கோரிக்கை விடுத்து உள்ளனர்.