உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி- ராகிங் செய்த சக மாணவி மீது வழக்கு

Published On 2023-08-15 10:12 IST   |   Update On 2023-08-15 10:12:00 IST
  • மாணவியை ‘ராகிங்’ செய்த மற்றொரு மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • கல்லூரியில் ‘ராகிங்’ கொடுமையால் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் படித்து வந்த கல்லூரியில் நேற்று சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதையடுத்து வினாடி-வினா போட்டி நடந்தது. அப்போது அந்த மாணவி அவருடன் படிக்கும் சக நண்பருடன் பேச முயன்றுள்ளார். ஆனால் அவரது நண்பர் பேசாமல் சென்றதாக தெரிகிறது. இதை பார்த்த மாணவியின் தோழிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் மாணவி மனவருத்தம் அடைந்தார். உடனே அந்த மாணவி அங்கிருந்து சென்றார்.

கல்லூரியில் உள்ள கட்டிடத்தின் மாடி தடுப்புச்சுவரில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் மற்றும் உடல் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதை பார்த்த சக மாணவிகள் படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். இது தொடர்பாக மாணவியின் தாயார் நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல்கட்ட விசாரணை யில் 'ராகிங்' கொடுமை காரணமாக மாணவி மாடியிலிருந்து குதித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவியை 'ராகிங்' செய்த மற்றொரு மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்லூரியில் 'ராகிங்' கொடுமையால் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News