இந்தியா முழுவதும் 150 மாவட்டங்கள் பங்கேற்பு- சரியான உணவு சாப்பிடும் சவால் போட்டியில் காஞ்சிபுரத்துக்கு 5-வது இடம்
- தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- இந்திய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உணவு பாதுகாப்பு துறையில் மனித வளம் மற்றும் நிறுவனங்களை பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவு பொருட்களைப் பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து குறியீடுகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, 2021-2022- ம் ஆண்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் நடத்தப்பட்ட சரியான உணவு சாப்பிடும் சவால் எனும் போட்டியில் இந்தியா முழுவதும் 150 மாவட்டங்கள் பங்கேற்றன. 75 மாவட்டங்கள் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்றுள்ள 75 மாவட்டங்களில் காஞ்சீபுரம் 5-வது மாவட்டமாக சிறந்த செயல்பாட்டிற்கான விருதினை பெற்றுள்ளது. இவ்விருதினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.