கோவையில் நள்ளிரவு உருட்டுக்கட்டையால் தாக்கி சமையல் தொழிலாளி படுகொலை
- நள்ளிரவு அங்கு வந்த யாரோ மர்மநபருக்கும் ராஜேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 47). சமையல் தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளாக கோவை நேரு விளையாட்டு மைதானம் அருகே பிளாட்பாரத்தில் தங்கி இருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேஷ் சமையல் வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் நேற்று மாலை நேரு விளையாட்டு மைதானத்துக்கு திரும்பினார். அவர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து விட்டு ஆடீஸ் வீதியில் உள்ள பெட்டிக்கடை அருகே படுத்து இருந்தார். நள்ளிரவு அங்கு வந்த யாரோ மர்மநபர்களுக்கும் ராஜேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் உருட்டு கட்டையால் ராஜேசின் தலையில் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்மநபர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
இன்று காலை சமையல் தொழிலாளி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ரேஸ்கோர்ஸ் போலீசார் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் தலைமையில் சம்பவஇடத்து க்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட ராஜேஷ் வைத்து இருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சமையல் தொழிலா ளியை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட ராஜேசுக்கு திருமணம் ஆகவில்லை. அவர் காந்திபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. எனவே அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது கஞ்சா புகைக்க வந்த வாலிபர்களுக்கு இடையே மோதலில் கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு மேமராக்களில் கொலை கும்பல் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொலை நடத்த பகுதியில் ஏற்கனவே 2 கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.