கடலூர் மத்திய சிறையில் தற்கொலைக்கு முயற்சி செய்த பிரபல ரவுடிக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த போது எடுத்த படம்.
சென்னை பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் தற்கொலை முயற்சி
- கடந்த சில தினங்களாக எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சிறைத்துறை அலுவலர்களிடம் தொடர்ந்து கூறி வந்ததாக தெரிகிறது.
- எண்ணூர் தனசேகரன் அங்கிருந்த சிறை துறை போலீசாரிடம் தான் அதிகளவில் ரத்த அழுத்த மாத்திரை மற்றும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன் என தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது.
இங்கு சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய சிறை சாலை ஜெயிலர் மணிகண்டன் சிறை வளாகத்தில் ஆய்வு செய்தார். அப்போது எண்ணூர் தனசேகரன் அறையில் இருந்து செல்போன் மற்றும் சார்ஜர் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். இதனால் கைதிகளுக்கு வெளிதொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து எண்ணூர் தனசேகரன் தூண்டுதலின் பேரில் சிலர் சிறை வார்டன் மணிகண்டன் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது குடும்பத்தை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் எண்ணூர் தனசேகரன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சிறைத்துறை அலுவலர்களிடம் தொடர்ந்து கூறி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் எண்ணூர் தனசேகரன் அங்கிருந்த சிறை துறை போலீசாரிடம் தான் அதிகளவில் ரத்த அழுத்த மாத்திரை மற்றும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன் என தெரிவித்தார்.
இதையடுத்து சிறைத் துறை அலுவலர்கள் தனசேகரனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எண்ணூர் தனசேகரன் தற்கொலைக்கு முயன்றது குறித்து வேலூர் சிறை துறை டி.ஐ.ஜி. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சிறைச்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.