உள்ளூர் செய்திகள்

வாகன சோதனையில் சிக்கியது: ரூ.1.53 லட்சம் பணம் பறிமுதல்

Published On 2024-03-17 03:47 GMT   |   Update On 2024-03-17 03:47 GMT
  • மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
  • நாகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல்,

நாகப்பட்டினம்:

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து நாகை மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கி விட்டனர்.

இதற்காக நாகை மாவட்டத்தில் 9 பறக்கும் படை, 9 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வெற்றாற்று பாலம் அருகே பறக்கும் படை தாசில்தார் வடிவழகன் தலைமையிலான அதிகாரிகள் வாகனங்களை மறித்து சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 400 எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காரைக்காலில் தனியார் பள்ளியில் கணக்கராக பணிபுரிந்து வரும் வெளிப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பதும், பள்ளி மாணவர்களின் கட்டண தொகையை எந்தவித ஆவணங்களும் இன்றி மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து வெங்கடேசனிடமிருந்து ரூ.1,53,400-யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நாகை தலைமை இடத்து துணை தாசில்தார் தனஜெயனிடம் ஒப்படைத்தனர்.

நாகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News