உள்ளூர் செய்திகள்

கடலூரில் பா.ஜ.க. தலைவர் ஆர்ப்பாட்டம் மேடையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

Published On 2022-10-27 07:14 GMT   |   Update On 2022-10-27 07:14 GMT
  • ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் கடலூர் பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
  • சோதனை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

கடலூர்:

தமிழக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறி தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கார் திடீரென்று வெடித்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, கார் இரண்டாக உடைந்த சம்பவம் பெரும் அதிர்வலையை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வெடிகுண்டு எடுத்துச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், இதனை தொடர்ந்து 5 பேரை உ.பா. சட்டத்தில் கைது செய்து என்.ஐ.ஏ விசாரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார்.

இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்பு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவு பேரில் தலைமை காவலர் பாரி தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தலைமை காவலர் இளங்கோவன் தலைமையில் மோப்பநாய் பீட் ஆர்ப்பாட்டம் நடைபெறும் மேடை முழுவதும் வெடிகுண்டு உள்ளதா? என்பதனை தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சந்தேகப்படும்படியான பொருட்கள் உள்ளதா? என்பதனையும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இது மட்டுமின்றி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் கடலூர் பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சோதனை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News