அரசு பஸ் டிரைவரை வெட்டி பணப்பையை பறித்த கும்பல்
- மருதேரி நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு இருவரும் தூங்கினர்.
- திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்போரூர்:
சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து திருப்போரூர் அருகே உள்ள மருதேரி பகுதிக்கு நேற்று இரவு அரசு பஸ் (60 எம்) சென்றது. டிரைவராக செந்தில்குமாரும், கண்டக்டராக கோபாலகிருஷ்ணனும் இருந்தனர்.
மருதேரி நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு இருவரும் தூங்கினர். நள்ளிரவு 1.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் திடீரென டிரைவர் செந்தில்குமார், கண்டக்டர் கோபால கிருஷ்ணனை தாக்கி டிக்கெட்டுடன் இருந்த பணப்பை, 2 செல்போன்களை பறித்தனர்.
இதனை தடுக்க முயன்ற டிரைவர் செந்தில்குமாரின் தலையில் கத்தி வெட்டும் விழுந்தது. பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பணப்பையில் ரூ.8,500, 20 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட் பண்டல்கள் இருந்தன.
இதேபோல் அதே பகுதியில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து பூச்செடிகளை ஏற்றி வந்த லாரி டிரைவர் கிருஷ்ண மூர்த்தியையும் மர்மகும்பல் தாக்கி ரூ. 5 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை பறித்தனர். மேலும் லாரியின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.