உள்ளூர் செய்திகள்

கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். எந்திரம்.


மானாமதுரையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்

Published On 2022-06-28 04:00 GMT   |   Update On 2022-06-28 04:00 GMT
  • ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறித்து வங்கி தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்று விசாரணை நடத்துகின்றனர்.

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பஸ் நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.

இந்த ஏ.டி.எம். பிரதான சாலையில் இருப்பதால் தினமும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து பணம் எடுத்து செல்வார்கள். இதனால் இந்த ஏ.டி.எம்.மில் தினமும் ரூ.10 லட்சம் வரை நிரப்பப்படும்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு ஒரு மர்மநபர் வந்துள்ளார்.

அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதியை அந்த நபர் உடைத்தபோது அலாரம் ஒலித்தது. இதனால் அச்சம் அடைந்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த நிலையில் அந்த வழியாக நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகனத்தில் வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் அலாரம் ஒலித்து கொண்டிருந்ததால் சந்தேகத்தின்பேரில் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர்.

கொள்ளை முயற்சி நடந்ததை அறிந்த அவர்கள், அதுபற்றி மானாமதுரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடம் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறித்து வங்கி தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்று விசாரணை நடத்துகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரை கண்டுபிடிப்பதற்காக ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ள வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தபோது அலாரம் அடித்ததால் பணத்தை கொள்ளையடிக்க வந்த மர்மநபர் சிக்கி விடுவோம் என்று அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடிவிட்டார். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

பிரதான சாலையில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்திருப்பது மானாமதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News