உள்ளூர் செய்திகள்

அச்சரப்பாக்கம் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: பிளஸ்-2 மாணவர்-நண்பர் பலி

Published On 2022-07-27 12:12 IST   |   Update On 2022-07-29 17:19:00 IST
  • அச்சரப்பாக்கம் அருகே உள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்.
  • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மதுராந்தகம்:

அச்சரப்பாக்கம் அருகே உள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இவரது மகன் சஞ்சய் (வயது21). இவர் டிஷ் ஆண்டனாக்களை வீடுகளில் பொருத்தும் வேலை செய்து வந்தார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவரது மகன் மற்றொரு சஞ்சய் (வயது19). இவர் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் நண்பர்களான இருவரும் தொழுப்பேடு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் கூட்ரோடு என்ற இடத்தில் அவர்கள் வந்தனர்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென முன்னால் சென்ற வேன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அம்மணம்பாக்கம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பலியான 2 பேரின் நண்பரான தொழுப்பேடு பகுதியை சேர்ந்த ஒருவர் கலந்து கொண்டார். பின்னர் அவரை நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் அழைத்துசென்று வீட்டில் விட்டு வந்த போது விபத்தில் சிக்கி நண்பர்கள் இருவரும் பலியாகி விட்டனர்.

Tags:    

Similar News