ஊத்துக்கோட்டை அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள பித்தளை வயர் திருடிய 9 பேர் கைது
- ஊத்துக்கோட்டை அருகே உள்ள குஞ்சலம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
- ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள குஞ்சலம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மின்சாதன பொருட்கள் அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜூலை 31-ம் தேதி 2 டன் எடையுள்ள ரூ.1 கோடி மதிப்புள்ள பித்தளை வயர் திருடப்பட்டு இருப்தாக மின்வாரிய பொறியாளர் கிருஷ்ண குமார் பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் குற்ற தடுப்பு பிரிவை சேர்ந்த ராவ்பகதூர், லோகநாதன், செல்வராஜ் ஆகியோருடன் கூடிய சிறப்பு படை அமைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி சில நாட்களுக்கு முன் அரக்கோணம் பஜார் தெருவைச் சேர்ந்த ரத்தினசாமி (42), பெரியசாமி (42) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அரக்கோணம் காவனூர் காலனி பெரிய தெருவை சேர்ந்த சசி (43), வினோத்குமார் (32), சாம் ஜெபதுரை (32) வின்சன்ட் பிரைட் (34), செய்யூர் காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (25), சின்னத் தெருவை சேர்ந்த திருமலை (25), திருத்தணி இருளர் காலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி (18), மோகன் (21), ராசு (17) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களை ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.