உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஊராட்சி தலைவரை கண்டித்து மறியலில் ஈடுபட்ட புதுப்பெண் உள்பட 7 பேர் கைது

Published On 2023-11-21 07:13 GMT   |   Update On 2023-11-21 07:13 GMT
  • இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.
  • 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகாமி. இவரிடம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், அவரது மனைவி கவிதா ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு நிலம் பத்திரப்பதிவு செய்வதற்காக 6 பவுன் நகையை கடனாக வாங்கி யதாக தெரிகிறது. பின்னர் அந்த நகையை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. இதுதொர்பாக கடம்பத்தூர் போலீஸ்நிலையம் மற்றும் போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் சிவகாமி புகார் செய்தார். இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் சிவகாமி தனது மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று புகார் கொடுக்க வந்தார். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த சிவகாமி மற்றும் அவரது உறவினர்கள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.

மேலும் சிவகாமி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் கைதான இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கிடையே கைதான 7 பேரையும் டிசம்பர்4-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டடார். இதையடுத்து புதுப்பெண் உள்பட 5 பெண்கள் புழல் மகளிர் சிறையிலும் மற்ற 2 பேரும் திருவள்ளூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News