உள்ளூர் செய்திகள்

செய்யூர் அருகே போலீஸ்காரர் கொலையில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2022-10-16 13:46 IST   |   Update On 2022-10-16 13:46:00 IST
  • போலீஸ்காரர் காமேஷ்வரன் கொலையில் கைதான மதன் பிரபு உள்பட 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
  • 172ரவுடிகள் மீது நன்னடத்தை பிணையம் பத்திரத்தின் கீழ் வருவாய் கோட்டாட்சியரிடம் ஆஜர் செய்யப்பட்டது

செங்கல்பட்டு:

செய்யூர் அருகே கடந்த 30.8.22 அன்று போலீஸ்காரர் காமேஷ்வரன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதன்பிரபு, தாமோதரன், மதன்பிரசாத், பார்த்திபன் மற்றும் பரசுராமன் ஆகிய 5 பேரை செய்யூர் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் குற்றவாளிகள் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் ராகுல் நாத்துக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து போலீஸ்காரர் காமேஷ்வரன் கொலையில் கைதான மதன் பிரபு உள்பட 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக போலீஸ்சூப்பிரண்டு பிர தீப் கூறியதாவது:-

ரவுடிகள் பல்வேறு கேட்டகிரியாக பிரிக்கப் பட்டுள்ளனர். ஏ பிளஸ்சில் குற்றவாளிகள் 5 பேர், எ கேட்டகிரியில் 51 பேரும், பி கேட்டகிரியில் 201-பேரும், சி கேட்டகிரியில் 127 பேர் என அவர்களின் குற்றத்திற்கு ஏற்ப மொத்தம் 386 ரவுடிகள் வகைபடுத்தப் பட்டுள்ளனர்.

இதில் 6 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 172ரவுடிகள் மீது நன்னடத்தை பிணையம் பத்திரத்தின் கீழ் வருவாய் கோட்டாட்சியரிடம் ஆஜர் செய்யப்பட்டது

இதில் 10 ரவுடிகள் நன்னடத்தை பிணையினை மீறியதால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பட்டு அடுத்த ஓராண்டு நன்னடத்தை பிணைய காலம் முடியும் வரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

100 ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது மட்டுமில்லாமல் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் 84 ரவுடிகளின் மீது புதிதாக இந்த வருடம் சரித்திர பதிவேடுகள் தொடங்கப்பட்டு அவர்களது நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் அல்லது யாரேனும் குற்ற செயல்களில் ஈடுபட முயற்சி செய்தாலோ அல்லது பொது மக்களின் உயிருக்கு அல்லது உடமைக்கு தீங்கு செய்ய முயற்சி செய்தாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News