உள்ளூர் செய்திகள்

பெண் டாக்டரை 3-வதாக திருமணம் செய்து சீர்வரிசை பொருட்கள் திருட்டு: ஆந்திர வாலிபரிடம் விசாரணை

Published On 2023-01-03 11:17 IST   |   Update On 2023-01-03 11:17:00 IST
  • மதுசூதனரெட்டியின் நடவடிக்கையில் ஆர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது.
  • மதுசூதனரெட்டி ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்ததும், இதனை மறைத்து 3-வதாக டாக்டர் ஆர்த்தியை திருமணம் செய்ததும் தெரிய வந்தது.

வேலூர்:

வேலூர் அடுக்கம்பாறை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 36). அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே திருமணமான இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள உதயமாணிக்கம் கிராமம் மாட்டிலவாடி பள்ளி பகுதியைச் சேர்ந்த கல்யாண புரோக்கர் விஸ்வநாதன் என்பவர் ஒரு வரன் இருப்பதாக கூறியுள்ளார்.

அவர் மூலம் அணுகிய போது அதே பகுதியைச் சேர்ந்த மதுசூதன ரெட்டி திருமணத்திற்கு பெண் தேடியது தெரிய வந்தது. அவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்ததாக கூறியுள்ளார்.

இதனையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்து பேசி முடித்தனர்.

கர்நாடக மாநிலம் கேஜிஎப் அருகே உள்ள ஒரு ஐயப்பன் கோவிலில் ஆர்த்தி, மதுசூதன ரெட்டிக்கு திருமணம் நடந்தது. வேலூரில் அவர்கள் குடும்பம் நடத்தினர். இந்த நிலையில் ஆர்த்தி கர்ப்பிணியானார்.

மதுசூதனரெட்டியின் நடவடிக்கையில் ஆர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து விசாரித்த போது மதுசூதனரெட்டி ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்ததும், இதனை மறைத்து 3-வதாக டாக்டர் ஆர்த்தியை திருமணம் செய்ததும் தெரிய வந்தது.

இதனை அறிந்த டாக்டர் ஆர்த்தி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மதுசூதன ரெட்டியிடம் கேட்டபோது அவர் தகராறில் ஈடுபட்டார்.

மேலும் மதுசூதனரெட்டியை அறிமுகப்படுத்திய புரோக்கர் விஸ்வநாதன் அவரது உறவினர் என்பது தெரியவந்தது.

இதுபற்றி கேட்டபோது, மதுசூதன ரெட்டி அவரது தாயார் எர்ரம்மா சகோதரர் மகேஷ் ரெட்டி அவரது மனைவி ரச்சிதா மற்றும் புரோக்கர் விஸ்வநாதன் ஆகியோர் சேர்ந்து ஆர்த்திக்கு மிரட்டல் விடுத்தனர்.

மேலும் திருமண சீர்வரிசை பொருட்கள் அனைத்தையும் அவர்கள் ஆர்த்தியின் வீட்டிலிருந்து எடுத்துச் சென்று விட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டாக்டர் ஆர்த்தி இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News