சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த மூதாட்டியிடம் 3 பவுன் நகை கொள்ளை
- டாக்டரின் ஆலோசனைக்கு பின் மாத்திரை வாங்க பொது மருத்துவ பிரிவு அருகே மூதாட்டி வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
- மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் அருகே உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் லட்சுமி (72). இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற நேற்று வந்தார். டாக்டரின் ஆலோசனைக்கு பின் மாத்திரை வாங்க பொது மருத்துவ பிரிவு அருகே வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் லட்சுமிக்கு உதவுவது போல பேச்சு கொடுத்தார்.
பின்னர் முதியோர் உதவி தொகை பெற்று தருவதாக கூறிய அவர் அதற்கு கழுத்தில் செயின் அணிந்து இருக்க கூடாது, அதனை கழற்றி கொடுங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன் என்று கூறினார்.
அதனை நம்பிய மூதாட்டி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை கழற்றி கொடுத்தார். ஆனால் அந்த நபர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.