அச்சரப்பாக்கம், கூவத்தூர், ஊத்துக்கோட்டையில் தனித்தனி விபத்தில் 3 பேர் பலி
- அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் பலியானார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கத்தில் உள்ள தியேட்டரில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் பாலகிருஷ்ணன் (வயது48). இவரது சொந்த ஊர் பண்ருட்டி செட்டிப்படை காலனி ஆகும்.
இவர் இன்று அதிகாலை வாரிசு மற்றும் துணிவு படங்களின் விளம்பர போஸ்டர்களை சுற்று வட்டார பகுதியில் உள்ள சுவர்களில் ஓட்டுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அச்சரப்பாக்கம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் பலியானார். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
கூவத்தூர் அடுத்த கானத்தூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (38).இவர் நண்பரான நவீனுடன் மற்றொரு நண்பரை சந்திக்க காரில் வடபட்டினம் நோக்கி சென்றார். சின்ன பாலம் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற ரோடு ரோலர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் பலியானார். நவீன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை, நாகலாபுரம் ரோடு மேற்கு காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (32). தொழிலாளி. இவர் நண்பரான சூளைமேனி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டையில் இருந்து சூளைமேனி நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
தொம்பரம்பேடு பகுதியில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி சென்று விட்டது. இதில் கார்த்திக், பிரகாஷ் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர்களை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பலியானார். பிரகாஷ் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.