குமாரபாளையம் அருகே துணிக்கடை உரிமையாளரை காரில் கடத்தி 18 பவுன் பறித்த 3 பேர் கைது
- நகைகளை பெற்றுக்கொண்ட மர்ம நபர்கள், சத்தியசுந்திரத்தை அனுப்பி வைத்தனர்.
- போலீசில் சொல்ல பயமாக இருந்ததால், தற்போது குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் ஆனங்கூர் சாலை மேட்டுக்கடை பகுதியில் வசிப்பவர் சத்தியசுந்தரம் (வயது 40). இவர் வெப்படையில் மங்கை சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி இரவு 9 மணியளவில் கடையை பூட்டி விட்டு, மேட்டுக்கடை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மேட்டுக்கடை பிரிவு பகுதியில் மொபட்டை வழிமறித்து 5 பேர், சத்தியசுந்தரத்தை காரில் கடத்திச் சென்றனர். பின்னர் மனைவிக்கு போன் செய்து, நகைகளை கொடுத்து அனுப்ப சொல், என கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டினர். இதையடுத்து அவரது மனைவி 18 பவுன் நகைகளை கொடுத்து அனுப்பினார்.
நகைகளை பெற்றுக்கொண்ட மர்ம நபர்கள், சத்தியசுந்திரத்தை அனுப்பி வைத்தனர். இது குறித்து அப்போது போலீசில் சொல்ல பயமாக இருந்ததால், தற்போது குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர்.
இதன்படி போலீசார் விசாரணை நடத்தி கரூர், வேலூரை சேர்ந்த பெல்ட் குமார் (37), ராஜன் (39), சலீம் (25) ஆகிய 3 பேர் பிடிபட்டனர். ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் தீபன் (32) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். பூமிநாதன் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். இவரை போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு, குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.