உள்ளூர் செய்திகள்

பவானி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி

Published On 2023-11-08 11:17 IST   |   Update On 2023-11-08 11:17:00 IST
  • 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
  • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பவானி:

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர்கள் சஞ்சய் மற்றும் கவுதம். இவர்கள் பெருந்துறையில் உள்ள சிப்காட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். தினமும் இவர்கள் மோட்டர் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோல் இன்று காலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு கிளம்பி சென்று கொண்டிருந்தனர்.

பவானியில் இருந்து சென்ற இவர்கள் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு பச்சப்பாலி மேடு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற லாரியினை முந்தி செல்ல முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் திடீரென நிலை தடுமாறி லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து லாரி டிரைவரான சேலத்தை சேர்ந்த குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News