உள்ளூர் செய்திகள்

பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட வாகனத்தில் 180 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளி பொருட்கள்

Published On 2024-03-26 10:23 GMT   |   Update On 2024-03-26 10:23 GMT
  • தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாகனத்தில் வந்த டிரைவர் மற்றும் பாதுகாவலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி:

பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்ட நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

அதன் அடிப்படையில் தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லையில் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஒரு வாகனத்தினை பறக்கும் படையினர் தருமபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் சோதனை சாவடியில் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 180 கிலோ தங்கம் மற்றும் 250 கிலோ வெள்ளி ஆபரணங்களாக செய்யப்பட்டு உரிய ஆவணங்களுடன் பெங்களூருவுக்கு கொண்டு செல்வதாக தெரியவந்தது.

உரிய ஆதாரங்கள் இருந்த போதிலும் அந்த தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் தமிழகத்திற்கு உண்டான அனுமதி இல்லாததால் வாகனத்தை ஆய்வுக்காக தொப்பூரில் இருந்து பறக்கும் படையினர் தருமபுரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். காலை 10 மணிக்கு நிறுத்திய வாகனம் ஒரு மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் யாரும் உடனே வரவில்லை.

இது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் சற்று காலதாமதத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்தனர். இதில் உள்ளிருக்கும் பொருட்களை அதன் உரிமையாளர் மட்டுமே திறக்க முடியும் என்று அவர்கள் கூறினர்.

உடனே தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களுக்கு சொந்தமான உரிமையாளருக்காக தகவல் கொடுக்கப்பட்டு அவருக்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மற்ற அரசு ஊழியர்களும் காத்துக் கிடந்தனர்.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாகனத்தில் வந்த டிரைவர் மற்றும் பாதுகாவலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News