உள்ளூர் செய்திகள்

பயிற்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

பீடி சுற்றும் தொழிலுக்கு மாற்றாக பெண்களுக்கு தையல், அழகு கலை பயிற்சி- புலிகள் காப்பக அதிகாரி தகவல்

Published On 2022-09-27 10:00 GMT   |   Update On 2022-09-27 10:00 GMT
  • “யானைகள் தன் பலமே தெரியாமல் சுற்றுவது போல, பெண்கள் தங்கள் பலத்தை அறியாமல் உள்ளனர்.
  • பெண்களை மதிப்புமிக்கவர்களாக, மரியாதைக்குரியவர்களாக மாற்ற வேண்டும், அவர்கள் திறமையை வெளி கொண்டு வர வேண்டும்.

களக்காடு:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம், களக்காடு சூழல் சரகத்தின் சார்பில், களக்காட்டில் முதல் கட்டமாக 15 பெண்களுக்கு தையல், அழகு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா நடந்தது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரியும், துணை வனபாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கி பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "யானைகள் தன் பலமே தெரியாமல் சுற்றுவது போல, பெண்கள் தங்கள் பலத்தை அறியாமல் உள்ளனர்.

பெண்களை மதிப்புமிக்கவர்களாக, மரியாதைக்குரியவர்களாக மாற்ற வேண்டும், அவர்கள் திறமையை வெளி கொண்டு வர வேண்டும், பெண்களுக்கு தன்நம்பிக்கையை கொடுக்க வேண்டும், அவர்கள் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதே வனத்துறையின் நோக்கமாகும், இதற்காகத்தான் இந்த தையல் அழகு கலை பயிற்சியை அளித்து வருகிறோம்.

கிராமங்களில் பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த தொழிலுக்கு மாற்றாக தையல் அழகு கலை பயிற்சியை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் பெண்களின் பொருளாதார நிலை மேம்படும். பயிற்சி பெற்ற பெண்களுக்கு சூழல் மேம்பாட்டு திட்ட அலுவலகங்கள் மூலம் ஆர்டர் எடுத்து கொடுக்கப்படும்.

இந்த தொழில் மேன்மையடைந்தால் வருங்காலத்தில் களக்காடு தையல், அழகு கலையின் மையமாக மாறும். பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் இங்கு தையல் ஆர்டர்கள் குவியும். இதனை கிராம தொழிலாக மாற்றுவதே வனத்துறையின் லட்சியமாகும்" என்றார்.

விழாவில் களக்காடு வனத்துறை துணை இயக்குனர் ரமேஷ்வரன், வனசரகர் பிரபாகரன், வனவர்கள் களக்காடு சிவக்குமார், திருக்குறுங்குடி அப்துல்ரஹ்மான், கிராம வனக்குழு தலைவர்கள் வடகரை பாலன், கலுங்கடி ஆனந்தராஜ், ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News