ஊட்டியில் களைகட்டும் கோடை சீசன்: சுற்றுலா பயணிகளுக்காக சர்குலர் பஸ்கள் இயக்கம்
- கோடை விழா நடைபெற உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- ஊட்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும், சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டம்-மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம்-குடும்பமாக ஊட்டிக்கு வந்து செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பயணிகளின் கூட்டம் மேலும் அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் புனித வெள்ளி, வார இறுதி விடுமுறை உள்பட 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், பொதுமக்கள் குடும்பத்தோடு ஊட்டிக்கு புறப்பட்டு வந்திருந்தனர்
அங்கு அவர்கள் பைக்காரா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்களை கண்டு ரசித்தனர். தொடர்ந்து ஊட்டி படகு இல்லத்திற்கு சென்று அங்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு மிதிபடகு, துடுப்பு படகு, மோட்டார் படகு ஆகியவற்றில் பயணம் சென்று ஏரியின் இயற்கை எழில் சூழ்ந்த காட்சிகளை கண்டுகளித்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானங்களில் இசைக்கருவிகளுடன் அமர்ந்திருந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அமர்ந்து உற்சாகமாக பொழுதுபோக்கினர்.
அப்போது அவர்கள் தங்களுக்குள் பாட்டுக்கு பாட்டு போட்டி நடத்தினர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று ராகத்துடன் பாடியது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
இதற்கிடையே ஊட்டி பூங்காவின் இன்னொரு பகுதியில் இளம்பெண்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமா பாடலுக்கு ஏற்ப, பெண்கள் நளினத்துடன் நடனமாடி உற்சாகப்படுத்தினர்.
நீலகிரியில் அடுத்த மாதம் கோடை விழா நடைபெற உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும்வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 சர்க்குலர் பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்கள் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஸ் கார்டன், தொட்டபெட்டா ஆகிய சுற்றுலா மையங்களுக்கு சென்று திரும்ப உள்ளன. மேலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சர்க்குலர் பஸ்களின் இயக்கத்தால் அங்குள்ள சுற்றுலா மையங்கள் மற்றும் நகர சாலைகளில் வாகன போக்குவரத்து குறைய வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால், ஊட்டி சாலைகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாளை (ஞாயிறு) விடுமுறை தினம் என்பதால் ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.