உள்ளூர் செய்திகள்

காவிரி இலக்கிய திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கீழடி அருங்காட்சியகத்தை மாணவர்கள் சென்று பார்க்க வேண்டும்-அமைச்சர் அறிவுரை

Published On 2023-03-19 09:25 GMT   |   Update On 2023-03-19 09:25 GMT
  • ரூ.18.43 கோடி மதிப்பில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
  • எப்படி நம் தமிழினம் வாழ்ந்துள்ளது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மஹால் மற்றும் சரஸ்வதி மஹாலில் தமிழக அரசு பொது நூலகத் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி இலக்கியத் திருவிழாவை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

தமிழ்மொழியின் செழுமையினையும், நமது மரபு, பண்பாடு, கலை மற்றும் வரலாற்றினை போற்றிடவும் இவற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை மூலம் பொது நூலக இயக்ககம் வாயிலாக தமிழகத்தில் வைகை, காவிரி, பொருநை மற்றும் சிறுவாணி என நதி நாகரிக மரபு அடிப்படையில் நான்கு இலக்கிய திருவிழாக்களும், சென்னையில் ஒரு இலக்கியத் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகின்றது.

இதில் திருநெல்வேலி, சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏற்கனவே இலக்கிய திருவிழா நடந்து முடிந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூரில் காவிரி இலக்கியத் திருவிழா தொடங்ககியது. இன்று வரை இந்த விழா நடைபெறுகிறது.

இவ்விழாவானது இலக்கியங்களை படைப்பு மற்றும், பண்பாட்டினை மையப்படுத்தி படைப்பரங்கம் மற்றும் பண்பாட்டு அரங்கம் என இரண்டு அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி மகாலில் படைப்பு அரங்க நிகழ்வுகளும், சங்கீத மகாலில் பண்பாட்டு நிகழ்வுகளும் நடைபெறுகிறது.

இவ்விழாவில் 45-க்கும் மேற்பட்ட இலக்கிய ஆளுமைகள் 30-க்கு மேற்பட்ட தலைப்புகளில் இரண்டு நாட்களும் இலக்கிய விருந்தளித்தனர்.

இத்திருவிழாவினை பற்றி விழிப்புணர்வினை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் வாசிப்பு சார்ந்த பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி என பல போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன.

முதல்-அமைச்சர் நடவடிக்கையால் ரூ.18.43 கோடி மதிப்பில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் அனைவரும் ஒருமுறை யாவது சென்று பார்க்க வேண்டும். சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலம் எப்படி நம் தமிழினம் வாழ்ந்துள்ளது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன் , டி.கே.ஜி. நீலமேகம் , தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி , மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன், சரஸ்வதி மஹால் நூலகம் நிர்வாக அலுவலர் முத்தையா, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட நூலக அலுவலர் முத்து, பொறியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முருகானந்தம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News