உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

Published On 2022-12-19 15:23 IST   |   Update On 2022-12-19 15:23:00 IST
  • தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
  • முழுமையாக குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் அரசு சான்றிதழ்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தமிழக அரசின் மானிய கோரிக்கை அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.‌

2022-23-ம் ஆண்டிற்கு தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளிடம் இருந்து திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் 1330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறல் எண் போன்றவற்றை தெரிவித்தல், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

‌‌‌ திருக்குறளின் அடைமொழிகள், சிறப்பு பெயர்கள், சிறப்புகள் ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.

திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.‌ போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யபெற்று பரிசு பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கப்படுவர்.

1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.‌

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

ஏற்கனவே இந்த பரிசை பெற்றவர்கள் மீண்டும் இப்போட்டியில் பங்கேற்க கூடாது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ- மாணவிகள் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 3-வது தளத்தில் இயங்கும் தமிழர் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் tamilvalarchithurai. tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து மேலும் விவரங்களுக்கு 04362-271530 என்ற எண்ணில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News