உள்ளூர் செய்திகள்

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ள காட்சி. 

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் மாவட்டம் முழுவதும் உஷார்

Published On 2022-12-07 14:04 IST   |   Update On 2022-12-07 14:04:00 IST
  • கடலில் குறைந்தபட்சம் 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
  • தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 28 பேர் அவசர அவசரமாக வருகை தந்துள்ளனர்.

கடலூர்:

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவான நிலையில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். மேலும் தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறக்கூடும். புயலாக மாறினால் மாண்டாஸ் என புயலுக்கு பெயர் வைக்கப்பட உள்ளது . இதன் காரணமாக கடலில் குறைந்தபட்சம் 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலூர், விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிக மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்து ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 28 பேர் அவசர அவசரமாக வருகை தந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்‌. அதனை மீறி ஒரு சில மீனவர்கள் மீன் பிடிக்க சென்றதும் குறிப்பிடத்தக்கது‌.

மேலும் கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள படகுகள் முழுவதும் சுமார் 30 அடி முதல் 50 அடி தூரத்திற்கு முன்னோக்கி பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமத்தில் டிராக்டர்கள் மூலமாக கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த படகுகளை பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 278 இடங்கள் மழையினால் பாதிக்கப்படக்கூடும் என மாவட்ட நிர்வாகத்தால் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்து வருகின்றனர். மேலும் மாவட்ட முழுவதும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் 1 - ம் எண் தூர புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது‌. இதன் மூலம் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்பதை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகின்றது. மேலும் குளிர்ந்த காற்று வீசுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News