உள்ளூர் செய்திகள்

பூண்டி ஏரி கொள்ளளவை அதிகரிக்க மண் பரிசோதனை- அதிகாரிகள் தீவிர ஆய்வு

Published On 2023-02-15 18:27 IST   |   Update On 2023-02-15 18:27:00 IST
  • 3.2 டிஎம்.சி தண்ணீர் சேமித்து வைக்கக் கூடிய வகையில் உள்ள ஏரியில் மேலும் 1.5 டிஎம்சி நீரை தேக்கி வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
  • பூண்டி ஏரிக்கரையோர பகுதியில் மண் பரிசோதனை நடந்து வருகிறது.

திருவள்ளூர்:

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. 8458 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதல் 3,231 மில்லியன் கன அடி(3.2 டி.எம்.சி.) தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திரமாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் மழைநீரை சேமித்து வைத்து சென்னை குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டினாள் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையின் போது ஒரு லட்சம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை அதிக அளவில் பெய்ததால் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு அது வீணாக கடலில் சென்று சேர்ந்தது.

இதனால் பூண்டி ஏரியின் நீர் மட்டத்தையும், நீர் இருப்பையும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து. அதன்படி பூண்டி ஏரியின் உயரத்தை மேலும் 2 அடி உயரம் உயர்த்துவதற்கான ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது 3.2 டிஎம்.சி தண்ணீர் சேமித்து வைக்கக் கூடிய வகையில் உள்ள ஏரியில் மேலும் 1.5 டிஎம்சி நீரை தேக்கி வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி பூண்டி ஏரிக்கரையோர பகுதியில் மண் பரிசோதனை நடந்து வருகிறது.

முதல் கட்டமாக வேலூர் நீர்வளத்துறை திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்ட செயற்பொறியாளர் குமரன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் வாசிலிங்கம், உதவி பொறியாளர் கலையரசி மற்றும் சென்னை, தரமணி மண் தன்மை ஆராய்ச்சியாளர்கள் பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றி 6 இடங்களில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து மண் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சதுரங்கபேட்டை கிராமத்தில் பூண்டி ஏரிக்கரை அருகே எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி அதில் இருந்து மணல் எடுக்கப்பட்டது. இதனை பரிசோதனைக்காக அனுப்ப உள்ளனர். இதன் அறிக்கையை வைத்து பூண்டி ஏரியின் உயரத்தை எவ்வளவு உயரம் உயர்த்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News