பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்,சென்னை விமான நிலையம்
வெளி நாடுகளில் இருந்து சென்னைக்கு 3.25 கிலோ தங்கம் கடத்தல்- 8 பேரிடம் சுங்கத்துறை விசாரணை
- பாங்காங், துபாய், கொழும்பு பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.1.45 கோடி
சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உளவுத் தகவல் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாங்காக்கிலிருந்து வந்த வந்த பயணி ஒருவரிடம நடத்தப்பட்ட சோதனையில் அவர் மறைத்து வைத்திருந்த 474 கிராம் எடையுள்ள 9 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் துபாயிலிருந்து வந்த இந்திய ஆண் பயணிகள் நான்கு பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அவர்கள் நூதனமுறையில் மறைத்து எடுத்து வந்த 1370 கிராம் எடையுள்ள 9 தங்க பொட்டலங்கள், ஆடைகள் வைக்கும் பெட்டிகளில் மறைத்து எடுத்து வந்த 680 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் மற்றும் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் கொழும்பிலிருந்து வந்த பெண் பயணிகள் இருவரை சோதனை செய்த போது, அவர்களின் கைப்பைகளிலிருந்து வெள்ளி முலாம் பூசப்பட்ட 730 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் 8 பயணிகளிடம் இருந்து மொத்தமாக ரூ.1.45 கோடி மதிப்புள்ள 3.25 கிலோ கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.