உள்ளூர் செய்திகள்

சிவகங்கை ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published On 2023-06-25 14:26 IST   |   Update On 2023-06-25 14:26:00 IST
  • சிவகங்கை ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
  • புதிய ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

சிவகங்கை

தென்னக ரெயில்ேவ கமிட்டி கூட்டத்தில், மதுரை மண்டல ரெயில்வே கமிட்டி உறுப்பினர் சையது இப்ராகிம் பேசியதாவது:-

பல்லவன் விரைவு ரெயிலை மானாமதுரை வரை நீட்டிப்பு செய்ய கடந்த 3 வருடங்களாக கோரிக்கை வைத்தோம். ஆனால் ரெயில்வே நிர்வாகம் அதனை ஏற்கவில்லை. மானாமதுரையில் அதற்கு தேவையான புதிய ஏற்பாடுகளை செய்து கொடுத்து பல்லவன் ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாரம் ஒருமுறை இயங்கும் ராமேசுவரம் - கோவை ரெயிலை ராமேசுவரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமையும், கோவையில் இருந்து வெள்ளிக்கிழமையும் இரவு நேர சேவையாக வழங்கினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும், நாட்டரசன் கோட்டை ரெயில் நிலையத்திற்கு நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு ஆகும் மதிப்பீட்டை இதுவரை வழங்கவில்லை. உடனே அதனை வழங்க வேண்டும்.

செட்டிநாடு ரெயில் நிலையத்தில் மீண்டும் ரெயில்கள் நிற்பதற்கு பலமுறை கோரிக்கை வைத்தோம். எப்பொழுது ரயில் அங்கு நிற்கும் ?. 2019-ம் ஆண்டில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கோரிக்கையின் அடிப் டையில் செங்கோட்டை எழும்பூர் ரெயில் சேவை தொடங்கியது. பின்னர் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்பு அந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மானாமதுரை மற்றும் சிவகங்கை ரெயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து பெங்களூருவுக்கு சிவகங்கை, காரைக்குடி வழியாக புதிய ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

சிவகங்கை ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பாம்பன் ரெயில் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பெயரை வைக்க வலியுறுத்தி உள்ளோம்.

எங்களை போன்ற உறுப்பினர்கள் அவசரகால பயண இட ஒதுக்கீடு பெற வாட்ஸ் அப் அல்லது இ-மெயில் முகவரியை வழங்கிட வேண்டும். மேலும் 2019-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே கோட்டயம், செங்கோட்டை, விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, நாகப்பட்டினம் வழியாக விரைவு தொடர்வண்டி சேவையை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News