- இடைக்காட்டூரில் திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி திருவிழா நடந்து வருகிறது.
- தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இங்கு 128 -ம் ஆண்டு திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி திருவிழா கடந்த
23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இங்கு மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருஇருதய பெருவிழா சிறப்பாக 10 நாட்கள் நடைபெறும்.
இந்த விழாவில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு ஏசு நாதரின் வாழ்வின் அற்புதங்களை எடுத்துரைப்பார்கள்.
இன்று முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா சிறப்பு திருப்பலியும், மாலை 6மணிக்கு திருஇருதய சொரூபம் தாங்கிய திரு தேர்பவனியும் நடைபெறுகிறது. நாளை (2-ந்ேததி) நற்பவனி விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல பணியாளர் இம்மானுவேல் தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செசல்ஸ் பேரவையினர் செய்து வருகின்றனர்.
திருவிழாவை முன்னிட்டு மதுரை மத்திய பஸ்நிலையம், எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து இடைக்காட்டூர் ஆலயத்துக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்திலேயே ஏசுநாதர் தனது இடதுபக்க இருதயத்தை காண்பித்தப்படி உள்ள ஒரே ஆலயம் இதுதான். பிரான்ஸ் நாட்டு கட்டிட கலையான "கோதிக்'' கட்டிட கலை நுட்பத்துடன தமிழகத்தில் முதன் முதலில் கட்டப்பட்டது இந்த தேவாலயம் ஆகும்.