உள்ளூர் செய்திகள்

சிவகங்கையில் மனிதநேய வார நிறைவு விழா

Published On 2023-01-31 08:28 GMT   |   Update On 2023-01-31 08:28 GMT
  • சிவகங்கையில் மனிதநேய வார நிறைவு விழா நடந்தது.
  • இதில் 66 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மனிதநேய வார நிறைவு விழா நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி 66 பயனாளிகளுக்கு ரூ.51.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

மனிதநேயத்தை எல்லோரும் சரியாக கடை பிடித்தால் சமுதாயத்தில் பாகுபாடு என்ற நிலை முற்றிலும் ஒழியும். அதை ஒவ்வொருவரும் உணர்ந்து மனிதநேயத்தை உறுதிப்படுத்தும் வகையில் தீண்டாமையை அகற்றி நல்லிணக்கத்துடன் வாழவேண்டும்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜக்கிய நாடுகளை சேர்ந்த அனைத்து நாடுகளிலும் இலக்கீடுகளை நிர்ணயித்து 2030-க்குள் அதனை செயல்படுத் துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதனடிப்படையில் மத்திய, மாநில அரசின் சார்பில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் மனித நேயம் குறித்து பள்ளி மாணவ மாணவிகள் தங்களின் பேச்சுத்திறன் வாயிலாக விரிவாகவும், சிறப்பாகவும் எடுத்துரைத்தனர். இதனை கருத்தில் கொண்டு எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அனைவரும் மனித நேயத்துடன் செயல்பட்டு, பிறருக்கு உதவும் மனப்பான்மையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன், அரசு வழக்கறிஞர் (வன்கொடுமை) துஷாந்த் பிரதீப்குமார், ஆதிதிராவிடர் நலக்குழு, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு, தூய்மை பணிபுரிவோர்களுக்கான கண்காணிப்புக்குழு ஆகிய குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களான ஆறுமுகம், பூமிநாதன், மலைச்சாமி, செல்வக்குமார், பிச்சை, மற்றும் பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News