உள்ளூர் செய்திகள்

கோவில் நிலங்களுக்கு அதிக வரி விதிப்பு

Published On 2023-01-11 09:37 GMT   |   Update On 2023-01-11 09:37 GMT
  • தேவகோட்டை அருகே கோவில் நிலங்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது.
  • இதுகுறித்து அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம் நடத்தினர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் திருமண வயல் ஊராட்சி கோட்டூர் நயினார் வயல் கிராமத்தில் அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட அகத்தீசுவரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு சுமார் 200 ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் கோட்டூர் நைனார் கோவில் கிராமத்தில் உள்ளன. இந்த விளை நிலங்களை 6 தலைமுறைகளாக இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலங்களுக்கு கடந்த ஆண்டு வரை ஏக்கருக்கு சுமார் ரூ.350 வீதம் வரியை அறநிலையத்துறை வசூலித்து வந்தது. இந்த நிலையில் தேவகோட்டை சிலம்பணி விநாயகர் கோவிலில் செயல்படும் அறநிலையத்துறை அலுவலகத்தில் இருந்து இந்த விவசாயிகளுக்கு தற்போது விவசாயம் செய்யும் நபர்களின் மீது ரசீது போடப்படும் என தகவல் தெரிவித்தது.

ஏற்கனவே இறந்தவர்கள் பெயரில் ரசீது உள்ள நிலையில் அவரது வாரிசுதாரர்கள் பெயரில் ரசீது போடப்படும் என்ற தகவலால் அனைத்து விவசாயிகளும் அறநிலையத்்துறை அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அறநிலையத்துறை அதி காரிகள் கடந்த ஆண்டுகளை விட இந்த நிலங்களுக்கு ஏக்கருக்கு 12 மடங்கு அதிக வரி விதித்திருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயி காமராஜ் கூறுகையில், உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்று இருக்க 6 தலைமுறைகளாக விவசாயம் செய்த நிலத் திற்கு நாங்கள் பட்டா கேட்கவில்லை. நிலங்களை தரிசாக போடவில்லை. இதற்கு பலனாக தற்பொழுது 12 மடங்கு வரி விதித்திருப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் அதை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக பயிர் காப்பீட்டு தொகையை அறநிலையத்துறை பெற்று வருவது வேதனை அளிக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே விவசாயம் செய்து வரும் நிலையில் அவற்றிலும் குறைந்த அளவே விளைச்சலும் உள்ளது. விவசாயம் இல்லை என்றால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்றார்.

Tags:    

Similar News