கொள்ளை நடந்த நாச்சியம்மன் கோவில்.
நாச்சியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
- தேவகோட்டை அருகே நாச்சியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருடப்பபட்டது.
- தேவகோட்டை அருகே நாச்சியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருடப்பபட்டது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றங்கரை நாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. விசேஷ நாட்களில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
கோவில் பூசாரி தியாகராஜன் நேற்று காலை வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மதிய நேரத்தில் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் குறைந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர் கோவில் சன்னதி முன்பு இருந்த உண்டியலை பெயர்த்து கொண்டு அங்கிருந்து தப்பினர்.
மாலையில் கோவிலுக்கு வந்த தியாகராஜன் உண்டியல் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் மர்மநபர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணங்கோட்டையில் கடந்த 11-ந் தேதி 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு தாய், மகள் கொலை செய்யப்பட்டனர்.நேற்று முன்தினம் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் மர்மநபர்கள் காம்பவுன்டு சுவர் ஏறி திருட முயன்றனர். இதை பார்த்து அப்பகுதி நாய்கள் கூச்சலிட்டதால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பினர்.
கடந்த சில மாதங்களாகவே தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொலை-கொள்ளை, வழிப்பறி, நகைபறிப்பு போன்றவை சர்வ சாதரணமாக நடந்து வருகிறது. கொள்ளையர்கள் இப்பகுதியில் முகாமிட்டு இதுபோன்ற துணிகர சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.