உள்ளூர் செய்திகள்

ஓய்வுபெற்ற ஊழியர் வீட்டில் 40 பவுன் நகைகள்-பணம் கொள்ளை

Published On 2022-07-07 09:25 GMT   |   Update On 2022-07-07 09:25 GMT
  • ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 40 பவுன் நகைகள்-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
  • நள்ளிரவு நேரத்தில் பீரோ வைக்கப்பட்டிருந்த வீட்டின் உள் அறையில் இருந்து சத்தம் கேட்டிருக்கிறது.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி கற்பக விநாயகர் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார். ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அலுவலர். சம்பவத்தன்று இரவு வீட்டின் ஒரு அறையில் அவரும், அவரது மகனும் படுத்து தூங்கினர்.

இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் பீரோ வைக்கப்பட்டிருந்த வீட்டின் உள் அறையில் இருந்து சத்தம் கேட்டிருக்கிறது. தனது மனைவி தான் அந்த அறையில் உறங்குவதாக ஆனந்தகுமார் நினைத்துள்ளார். காலையில் அந்த அறை கதவு திறக்கப்படாததால் எதிர் வீட்டில் வசிக்கும் தனது மகளை அழைத்து, அம்மா உள்ளறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்என்று கூறினார்.

அப்போது அவரது மகள், அம்மா எங்கள் வீட்டில் தான் இருக்கிறார், அங்கு எப்படி இருப்பார் என்று கேட்டுள்ளார். அந்த அறைக்கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் ஆனந்தகுமாரும், அவரது மகனும் பின்பக்கமாக சென்று பார்த்தபோது, ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்தது.

யாரோ மர்மநபர்கள் ஆனந்தகுமாரின் வீட்டுக்குள் இரவு நேரத்தில் ஜன்னலை உடைத்து புகுந்து உள்பக்கமாக கதவை தாழிட்டுக்கொண்டு பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம், வெள்ளி பொருட்கள், வைர நகையை கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர்.

மொத்தம் 40 பவுன் தங்க நகைகள், வைர மோதிரம் , ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஆனந்தகுமார் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டினுள் ஆட்கள் இருக்குபோதே, ஆனந்தகுமாரின் வீட்டுக்குள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றிருக்கும் சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News