உள்ளூர் செய்திகள்

கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் தருமபுர ஆதீனம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published On 2023-05-24 15:02 IST   |   Update On 2023-05-24 15:02:00 IST
  • 8 கால யாகசாலை பூஜைகள், பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
  • கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது.

சீர்காழி:

சீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர்- உமாமகேஸ்வரி அம்மன், சட்டைநாதர் ஆகிய சுவாமிகள் 3 நிலைகளில் காட்சி தருகின்றனர்.

திருஞானசம்பந்தர் பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய அற்புத தலமாகும். காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவர்கள் இக்கோவிலில் தெற்குகோபுரம் அருகே தனி சன்னதியில் காட்சி தருகின்றனர். பிரசித்திப் பெற்ற இக்கோவிலில் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.

அதன் பின்னர் தற்போது கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தொடங்கி ரூ.20கோடி செலவில் நடைபெற்று வந்தது.

முத்துசட்டை நாதர்சுவாமி, திருஞானசம்பந்தருக்கு கருங்கல்மண்டபம், கருங்கல்பிரகாரங்கள், மேள்தளம் புதுப்பித்தல், வர்ணபூச்சு என திருப்பணிகள் சிறப்பாக நடந்து முடிந்து கடந்த சனிக்கிழமை 8 கால யாகசாலை பூஜைகள் 11 பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்துமுடிந்தது.

இன்று நான்கு கோபுரங்கள், சுவாமி-அம்மன் விமான கலசங்கள், மலைக்கோயில் விமானகலசம் உள்ளிட்டவைகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், பல்வேறு மடத்து ஆதீனங்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவலு, சவுந்தர்ராஜன், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷே கத்தின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது. மேலும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உஷா தலைமையில் பல்வேறு மாவட்ட சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுப்பட்டனர்.

Tags:    

Similar News