வக்பு சட்டத் திருத்தம்: நெல்லை மேலப்பாளையத்தில் கடை அடைப்பு போராட்டம்
- வாடகை கார், ஆட்டோக்களும் ஓடவில்லை.
- 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
நெல்லை:
மத்திய அரசு வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி சட்டமாக இயற்றி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் புதிய வக்பு திருத்த சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக கூறி வக்பு திருத்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இன்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.
இதனிடையே நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஜமாத் தலைவர்கள், தி.மு.க., ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.மு.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், வியாபாரிகள் இணைந்து கடை யடைப்பு போராட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நெல்லை மேலப்பாளையத்தில் இன்று சுமார் 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டி ருந்தது.
இதன் காரணமாக சந்தை ரவுண்டானா முக்கு பகுதிகள், பஜார் வீதிகள், அண்ணா வீதி, நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடைகள் அடைப்பால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மெடிக்கல், பால் கடைகள் உள்ளிட்டவை தவிர சுமார் 95 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
அவர்களுக்கு ஆதரவாக வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் இயங்கவில்லை. சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடாததால் பள்ளி-கல்லூரி, ஆஸ்பத்திரி, அரசு அலுவலகங்கள் செல்லும் மக்கள் பெரிதும் பாதிப் படைந்தனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக மேலப்பாளையம் நகரின் முக்கிய வீதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.