மதுரவாயல் அருகே 8-ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி பலி
- பாரதி ஏரிக்கு சென்று தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து குளித்து விளையாடிக் கொண்டிருந்தான்.
- திடீரென நீரில் மூழ்கி தத்தளித்த பாரதி சிறிது நேரத்தில் மாயமானார்.
போரூர்:
மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனி 7-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம். கார் டிரைவர். இவரது மகன் பாரதி (வயது 13) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
பாரதி நேற்று மாலை ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியில் உள்ள ஏரிக்கு சென்று தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து குளித்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென நீரில் மூழ்கி தத்தளித்த பாரதி சிறிது நேரத்தில் மாயமானார். இதை கண்ட பாரதியின் நண்பர்கள் கூச்சலிட்டனர். அருகில் உள்ளவர்கள் தேடியும் பாரதியை மீட்க முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய பாரதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே சிறுவன் பாரதி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.