தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி முத்துலட்சுமிக்கு ராஜா எம்.எல்.ஏ., வாழ்த்து தெரிவித்த காட்சி.
வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சங்கரன்கோவில் தொழிலாளி மகள் முதலிடம்- ராஜா எம்.எல்.ஏ. நேரில் வாழ்த்து
- முத்துலட்சுமி வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலி முதலிடம் பிடித்துள்ளார்.
- பிளஸ்-2 பொதுத்தேர்வில் முத்துலட்சுமி 583 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் சண்முகசாமி.இவரது மனைவி வள்ளியம்மாள். சண்முக சாமி ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆவார்.
இவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் மகள் முத்துலட்சுமி வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். முத்துலட்சுமி தனது ஆரம்ப கால பள்ளி படிப்பை நவநீதகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து உள்ளார். 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை சங்கரன்கோவில் எஸ்.என்.ஆர். மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார். தற்போது வெளியான பிளஸ்-2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம் ஆகிய 4 பாடங்களில் முழு மதிப்பெண்களுடன் முத்துலட்சுமி 600-க்கு 583 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
தொடர்ந்து வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தர வரிசைப்பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளில் முத்துலட்சுமியும் ஒருவர் ஆவார். வேளாண் பல்கலைக்கழக பட்டியலில் முதலிடம் பிடித்த முத்துலட்சுமிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ், வகுப்பு ஆசிரியர் பார்வதி சிவகாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி முத்துலட்சுமியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தினார். அப்பொழுது மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, தலைவன் கோட்டை கூட்டுறவு வங்கி தலைவர் விஜயபாண்டியன், நகர செயலாளர் பிரகாஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.