உள்ளூர் செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

சீர்காழி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

Published On 2023-02-02 09:34 GMT   |   Update On 2023-02-02 09:34 GMT
  • சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
  • மக்கள் குப்பைகளை தரம் பிரித்து மட்டுமே தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. 24 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் கொட்டப்படுகிறது.

இதனிடையே கடந்த சில மாதங்களாக உர கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை மட்டுமே உரக்கிடங்கிற்கு கொண்டுவந்து சேகரிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியா ளர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து மக்கள் குப்பைகளை தரம் பிரித்து மட்டுமே தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதனால் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து உரக்கிடங்கிற்கு கொண்டு செல்வதில் ஏற்படும் தாமதத்தால் நகரில் ஆங்காங்கே குப்பைகள் தேக்கமடையும் சூழ்நிலை உருவாகிறது.

இந்நிலையில் சீர்காழி நகராட்சியில் பணியாற்றும் தற்காலிக மற்றும் நிரந்தர தூய்மை பணியாளர்களில் ஒரு பிரிவினர் 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு தனி உரக்கிடங்கு கூடுதலாக அமைத்து தர வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்படுத்துவதை கண்டித்து தர்ணாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே நகராட்சி ஆணையர் வாசுதேவன் துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் இதனை அடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News