உள்ளூர் செய்திகள்

 கொலை செய்யப்பட்ட டிரைவர் சதீஷ்  / கைது செய்யப்பட்ட திருநங்கை நவ்யா

கத்தியை காட்டி மிரட்டி உல்லாசத்திற்கு அழைத்ததால் அடித்து கொன்றேன்

Published On 2023-09-30 09:16 GMT   |   Update On 2023-09-30 09:16 GMT
  • திருநங்கை நவ்யா (36), இவர் கடந்த 10 ஆண்டுகளாக அய்யா கவுண்டர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.
  • ஆத்திரம் அடைந்த நவ்யா கட்டையை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (34), சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

திருநங்கை

அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்தவர் திருநங்கை நவ்யா (36), இவர் கடந்த 10 ஆண்டுகளாக அய்யா கவுண்டர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். இவருக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதனால் சதீஷ்குமார் அடிக்கடி நவ்யாவின் வீட்டிற்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சதீஷ்குமார் தனது நண்பரான வாழப்பாடி பாட்டப்பன் கோவில் பகுதியை சேர்ந்த கவியரசன் (34) என்பவருடன் குடிபோதையில் நவ்யாவை தேடி அவரது வீட்டிற்கு சென்றார்.

பின்னர் அவரை அழைத்து பேசி விட்டு சதீஷ்குமாரும், கவியரசனும் அங்கிருந்து சென்று விட்டனர். மீண்டும் திரும்பி வந்த சதீஷ்குமார் கதவை தட்டி நவ்யாவை வெளியே வரவழைத்து அவரை உல்லாசமாக இருக்க அழைத்தார். இதற்கு நவ்யா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

அடித்து கொலை

இதில் ஆத்திரம் அடைந்த நவ்யா கட்டையை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் கதறி துடித்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு வாழப்பாடியில் முதலுதவி சிகிச்சை அளித்து சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்த சதீஷ்குமார் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

இதற்கிடையே நவ்யாைவ கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-

சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு எனது வீட்டிற்கு வந்து என்னை உல்லாசத்திற்கு அழைத்தார். அதற்கு நான்மறுத்ததால் தகாத வார்த்தையால் பேசினார். மேலும் கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கினேன். இதில் நிலைகுலைந்த அவர் தரையில் சாய்ந்தார். இதையடுத்து அங்கிருந்து நான் தப்பி ஓடினேன், ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மருத்துவ பரிசோதனை

இதையடுத்து சேலம் அரசு மருத்துவ மனையில் அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்து தகுதி சான்றிதழ் பெற்று வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News