கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் 500 பேருக்கு ஏ.டி.எம். கார்டு
- இன்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு வருகிறார்.
- டிசம்பர் மாதம் 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு
சேலம்
தருமபுரியில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் இன்று காலை பங்கேற்கிறார்.உற்சாக வரவேற்பு: தொடர்ந்து இன்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு வருகிறார். அவருக்கு கலெக்டர் கார்மேகம் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கட்சியினர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இன்று இரவு சேலத்தில் ஓய்வெடுக்கிறார்.
சேலம் அழகாபுரம் கூட்டுறவு மண்டபத்தில் நாளை (27-ந் தேதி ) காலை 9 மணியளவில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 500 பேருக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கார்மேகம், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.மாநாட்டு திடலில் ஆய்வு: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் டிசம்பர் மாதம் 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பார்வையிடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து கட்சியினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து காரில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி அவர் செல்லும் வழியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.