உள்ளூர் செய்திகள்

விபத்துக்களை தடுக்க வேகத்தடை, சாலை தடுப்புகள் அமைக்க வேண்டும்

Published On 2023-10-05 15:11 IST   |   Update On 2023-10-05 15:11:00 IST
  • சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையமாக விளங்கி வருகிறது.
  • சாலையை புதுப்பிப்பதற்காக அகற்றப்பட்ட சாலை தடுப்புகள், வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையமாக விளங்கி வருகிறது. கல்வி, மருத்துவம், வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனர்.

அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள், லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகனங்கள் மற்றும் வேன், கார்கள் உள்பட தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.

பரபரப்பாக இருக்கும்

வாழப்பாடியில் பஸ் நிலையம், பெரும்பாலான அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், கடைவீதி, தினசரி சந்தை, பயணியர் மாளிகை, தபால்நிலையம், வேளாண் விற்பனை நிலையம், போலீஸ் நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவை பிரதான கடலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. இந்த இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

சாலை புதுப்பிப்பு

சேலம்- –சென்னை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் போது வாழப்பாடியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வந்த கடலூர் சாலையை விரிவுபடுத்தாமல் முத்தம்பட்டியில் இருந்து மத்தூர் வரையிலான 4 கி.மீ. தூரத்திற்கு இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

இருப்பினும், கடலூர் சாலையில் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. கடந்த 3 ஆண்டுக்கு மேலாக குண்டும் குழியுமாக பழுதடைந்து கிடந்த இச்சாலையை புதுப்பிக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை ஏற்று முத்தம்பட்டியில் இருந்து மத்தூர் வரையிலான 4 கி.மீ தூரம் கடலூர் சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை கடந்த மாத இறுதியில் புதுப்பித்தது. இச்சாலையை மாநில நெடுஞ்சாலை துறை வசம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளது.

வேக தடைகள் அமைக்க கோரிக்கை

சாலையை புதுப்பிப்பதற்காக அகற்றப்பட்ட சாலை தடுப்புகள், வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பஸ் நிலையம், கடைவீதி, மன்னாயக்கன்பட்டி பிரிவு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, போலீஸ் நிலையம், அரசு மருத்துவமனை, பேளூர் பிரிவு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே முத்தம்பட்டியில் இருந்து மத்தூர் வரையிலான கடலூர் சாலையில் இரு மார்க்கத்திலும் வாகனங்கள் சீராக செல்ல சாலை தடுப்புகள் அமைக்கவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், டிரைவர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News