உள்ளூர் செய்திகள்

தீக்குளிக்க முயன்ற மகாலட்சுமி.

தாரமங்கலம் நகராட்சியில் அதிகாரிகள் விசாரணை

Published On 2023-07-05 07:06 GMT   |   Update On 2023-07-05 07:06 GMT
  • மகாலட்சுமி (வயது 46). இவர் நேற்று பகல் 1 மணியளவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
  • அங்கு அலுவலகத்தின் முன்பு நின்ற அவர் திடீரென தனது கட்டைப்பையில் வைத்திருந்த கேனில் உள்ள பெட்ரோலை எடுத்து தலை மற்றும் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் நகராட்சியில் கடந்த 17 ஆண்டுகளாக துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வருபவர் மகாலட்சுமி (வயது 46). இவர் நேற்று பகல் 1 மணியளவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அலுவலகத்தின் முன்பு நின்ற அவர் திடீரென தனது கட்டைப்பையில் வைத்திருந்த கேனில் உள்ள பெட்ரோலை எடுத்து தலை மற்றும் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஓடி வந்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி நனைத்தபடியால் உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள தாரமங்கலம் நங்கவள்ளி மெயின் ரோட்டில் உருண்டு விழுந்து கதறி துடித்துள்ளார்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கவுன்சிலர் சின்னுசாமி. செல்வமணி ஆகியோர் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, துப்புரவு ஆய்வாளர் கோபிநாத் ஆகியோரிடம் மகாலட்சுமிக்கு ஆதரவாக விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுத பெண் ஊழியர் மகாலட்சுமி கூறியதாவது:- நகராட்சியில் பணிபுரியும் சக துப்புரவு ஊழியர் ஒருவர் தான் அதிகாரி போல் நடந்து கொண்டு என்னை ஒருமையில் திட்டி வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடுவதும்,என்னை அலுவலகத்திற்கு வெளியில் நிறுத்தியும் கொடுமை படுத்துகிறார். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறியும் எனக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

இதையடுத்து பெண் ஊழியரை மீட்டு தாரமங்கலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தரமாங்கலம் நகராட்சியில் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மகாலட்சுமி புகார் கூறிய சக துப்புரவு ஊழியரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News