உள்ளூர் செய்திகள்

போலி வாரிசு சான்றிதழ் வாங்கிய பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு

Published On 2023-06-19 09:20 GMT   |   Update On 2023-06-19 09:20 GMT
  • காளிமுத்து என்பவரையும், பெரியண்ணன் மனைவி தங்கம்மாள் என்பவரையும் தனது பெற்றோர் என கூறி அவர்கள் இறந்து விட்டதாக இறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளார்.
  • காளிமுத்து திருமணம் ஆகாமலேயே இறந்தவர் ஆவார்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை சேர்ந்த துரைசாமி மனைவி சாந்தி. இவர் அதே பகுதியைச் காளிமுத்து என்பவரையும், பெரியண்ணன் மனைவி தங்கம்மாள் என்பவரையும் தனது பெற்றோர் என கூறி அவர்கள் இறந்து விட்டதாக இறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளார். இதில் காளிமுத்து திருமணம் ஆகாமலேயே இறந்தவர் ஆவார். அதுமட்டுமின்றி, வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்து, 2019 மார்ச் 13 அன்று காளிமுத்துக்கும், 2021 மார்ச் 18–-ல் தங்கம்மாளுக்கும் தானே வாரிசு என போலியாக வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த தங்கம்மாளின் மகனான வாழப்பாடியில் வசித்து வரும் சேகர் என்பவர், சாந்தி, தனது தாயார் பெயரில் போலியாக வாங்கிய வாரிசு சான்றிதழை ரத்து செய்யக் கோரி, ஆத்துார் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய ஆத்துார் கோட்டாட்சியர் சரண்யா, சாந்தி போலியாக பெற்ற 2 வாரிசு சான்றிதழ்களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, தனது தாய் தங்கம்மாள் பெயரில் போலி வாரிசு சான்றிதழ் பெற்று, தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கும் சாந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஏத்தாப்பூர் போலீசில் சேகர் புகார் தெரிவித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்துார் நீதித்துறை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரணை செய்த ஆத்துார் நடுவர் நீதிமன்ற நீதிபதி முனுசாமி, போலி வாரிசு சான்றிதழ் பெற்ற சாந்தி மற்றும் பொய் சாட்சியளித்த சாந்தியின் மகன் ராஜேந்திரன், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பரமணி. பாப்பா ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திட ஏத்தாப்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் சாந்தி, ராஜேந்திரன், சுப்பரமணி மற்றும் பாப்பா ஆகிய 4 பேர் மீதும், 3 பிரிவுகளின் கீழ் ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News